நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி…!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நடந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் முதலாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவும் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஜெய்ஸ்வால் (161), விராட் கோலி (100), லோகேஷ் ராகுல் (77) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது நாளான நேற்றைய தினம் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஊசலாடியது. இந்தநிலையில் நான்காவது நாள் ஆட்டம் இன்று ( 25-11- 2024) நடைபெற்றது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா (4) சிராஜ் பந்தில் ரிஷாப் பன்டிடம் கேட்சானார். அடுத்து ஸ்மித், ஹெட் கூட்டணி சேர்ந்தனர். எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 17 ரன்னில் அவுட்டானார்.ஹெட், மார்ஷ் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. அரைசதம் கடந்த ஹெட் 89 ரன்னில் வெளியேறினார். மார்ஷ் 47 ரன்னில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் போல்டானார். தேநீர் இடைவெளி வரை ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எஞ்சிய இரண்டு விக்கெட்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Comments are closed.