நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. இந்த தேர்தலில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை. மாறாக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. போட்டியிடுகிறது. விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில், 2.95 லட்சம் நிர்வாகிகள் உள்ளனர். மாநில பொதுச் செயலர்களாக 3 பேர் உள்ளனர். ஆனால், கட்சியில் அவைத்தலைவர் பதவி உருவாக்கப்படவில்லை. தகுதியான ஆள் கிடைக்காததால், அந்த பதவி அப்படியே விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது, சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க., இணைந்ததால் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இதனால், தன்னை பா.ஜ., ஓரங்கட்டி விட்டதாக அவர் கருதுகிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்கு பன்னீர்செல்வம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, இனியும் பா.ஜ., கூட்டணியில் அசிங்கப்படாமல், விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்யுமாறு, அவரது அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் யோசனை கூறினார். இதன் தொடர்ச்சியாக, பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சை த.வெ.க., தலைமை துவக்கியுள்ளது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் விசாரித்த போது த.வெ.க.,விற்கு ஓபிஎஸ் வந்தால், அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்க விஜய் விரும்புகிறார். இது குறித்த தன் எண்ணத்தை, நண்பர் ஒருவர் வாயிலாக பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார். ஆனால், அதை பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. தேவைப்பட்டால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து மட்டுமே பரிசீலிக்கப்படும் என, பதில் கூறப்பட்டுள்ளது. த.வெ.க.,வில் பன்னீர்செல்வம் இணைந்தால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் கிடைக்கும் என விஜய் கணக்கு போடுகிறார். எனவே, ஆக., 25ல் மதுரையில் நடக்கும் த.வெ.க., மாநாட்டிற்குள், பன்னீர்செல்வத்தை இழுக்கும் முயற்சி மும்முரமாக நடக்கின்றன. குறைந்தபட்சம் மாநாட்டிற்கு அவரை வரவழைத்து, கூட்டணியை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.