சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும். இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் முதலாவது பூச்சொரிதல் விழா அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் பூஜைகளுடன் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. யானை மீது பூத்தட்டு வைக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தேரோடும் வீதியில் ஊர்வலமாக வந்து பூக்களை சாற்றி வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாராயணன், அறங்காவலர்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சைமணி, சே.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். முதல் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கிய நிலையில் இரண்டாவது பூச்சொரிதல் விழா மார்ச் 15ம் தேதியும், மூன்றாவது பூச்சொரிதல் விழா மார்ச் 22ம் தேதியும், நான்காவது பூச்சொரிதல் விழா மார்ச் 29ம் தேதியும், ஐந்தாவது பூச்சொரிதல் விழா ஏப்ரல் ஐந்தாம் தேதியும் தொடர்ந்து நடக்கின்றன.

Comments are closed.