மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன. 16) பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கண்டுகளித்தார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முதல் நாளில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், இரண்டாவது நாள் பாலமேடு ஜல்லிக்கட்டும், மூன்றாவது நாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறும். அந்தவகையில், நேற்றைய தினம் முதல்நாள் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று, மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 5,757 காளைகளும், 1,913 மாடுபிடி வீரர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். தீவிர மருத்துப் பரிசோதனைக்கு பிறகே, மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.போட்டியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உற்சாகமாக கண்டு களித்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். இதில், அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு பரிசாக காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Comments are closed.