மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் – துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம்…!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் பேசுகையில், எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி . இந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் போது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான் . ராகுல் காந்தியும், நமது முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகின்றனர். எனவே, மத்தியில் இந்தியா கூட்டணியான ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும் . இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வைக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல் . அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது. எனவே, துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவகுமார், 41 வது வட்ட செயலாளர் அப்பு என்கின்ற கருணாநிதி, 42 வது வட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர்களான மறைமலை, தனசேகர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.