கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணப்பாறையில் 4ம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.இந்த சம்பவத்தில் உண்மை தன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Comments are closed.