திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்து சுமைப்பணி தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்க வேண்டும்-சங்கம் சார்பில் குறைதீர் கூட்டத்தில் மனு…!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(09-12-2024) நடந்தது. கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெஷ்மியிடம் சங்கத் தலைவர் சின்னதுரை, செயலாளர் பிரபு ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரத்தில் பொது மக்களின் நன்மைக்காக தினசரி காந்தி மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்தான் காந்தி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500 கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் பல்வேறு காய்கறிகள், பழங்கள், வாழைக்காய் உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் வரும். காந்தி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய காய்கறிகளை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என்று சுமார் 2500 சுமை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களில் பட்டதாரிகள், பாலிடெனிக், ஐடிஐ, 12ம் வகுப்பு படித்தவர்கள் என 25% இருக்கிறார்கள். தொழிலாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்கள் சங்கத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசு, காந்தி மார்க்கெட்டை மதுரை ரோடு பஞ்சப்பூர் அருகே மாற்றுவதற்கு முடிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல காந்தி மார்க்கெட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் வேலை உத்தரவாதம் மற்றும் புதிதாக ஏற்படவுள்ள மார்க்கெட்டில் தொழிலர்களுக்குரிய வசதிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக்கொண்டு எங்கள் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed.