Rock Fort Times
Online News

மாநாடு அல்ல கொள்கைத் திருவிழா! – த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், முதன்முதலாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம் !உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது, தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில் தான் இந்த கடிதம் அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும், இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.  அதை அரசியல் ரீதியாக, சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும் ஒரு லட்சிய கனல்.  இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால் நம் அரசியல் களப்பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.  நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் இது நம்முடைய கொள்கை திருவிழா. அதுவும் வெற்றி கொள்கை திருவிழா.  இப்படி சொல்லும் போதே ஒரு எழுச்சி உணர்வு நம் நெஞ்சில் தொற்றிக் கொள்கிறது. இது தன் தாய் மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வது தான். என தெரிவித்திருக்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்