ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் எந்த தேர்தலிலும் ஒரு முறை கூட போட்டியிடவில்லை.இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் இந்த 345 அரசியல் கட்சிகளையும் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். 2019ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி, காமராஜர் மக்கள் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். அந்த கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலிலிருந்து நீக்கலாமா என கேட்டு பதில் பெற்று 1 மாதத்திற்குள் பரிந்துரைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
Comments are closed.