மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது- திருச்சியில் சபாநாயகர் அப்பாவு பேச்சு…!
தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 -வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டத்தை சமக்ரா சிக்க்ஷ என பெயர் மாற்றியுள்ளனர். எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். ஆனால், தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி வர வில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக டெல்லி சென்று கேட்டுள்ளார். 100 நாள் வேலை திட்டத்துக்கு தேவையான நிதி கிடைக்காததால் மாநில அரசுக்கு தடுமாற்றமாக உள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு ரூ. 1 செலுத்தினால் அதில் 19 காசுகள் நமக்கும், இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு ரூ.2 ம் கிடைக்கிறது. இயற்கை பேரிடர், வளர்ச்சி திட்டங்கள் எதற்குமே மத்தியஅரசு நிதி வழங்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து நிதி நெருக்கடியை மாநில அரசுக்கு கொடுத்து வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும் முதலமைச்சர் திறம்பட சமாளித்து வருகிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு பள்ளிக் கல்வித்துறை பல சாதனைகளை செய்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முயற்சி எடுத்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ். அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பித்தாலும் ஒரு பணியிடம் கூட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், முறையாக நடைபெற்று வருகிறது என்றார்.
Comments are closed.