‘போதையின் பாதை’யை அடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…* திருச்சியில் வைகோ நடை பயணத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!
திருச்சியில் இருந்து மதுரைக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறாா். இன்று(02-01-2026) தொடங்கும் நடைபயணம் வருகிற 12-ம் தேதி நிறைவு பெறுகிறது. வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வைகோவின் நெச்சுரத்தையும், உறுதியையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா? என்று நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்களே வெறுப்பு பேச்சு பேசி மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்து சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன. நாட்டின் எல்லைக்குள் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் சிக்கின. நாட்டுக்குள் பல்வேறு வழியாக போதைப் பொருள் வருகிறது. அதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி, பாதையை அடைக்க வேண்டும். போதைப் பொருளை புழக்கத்தில்விடும் குற்றவாளிகளில், நைஜீரியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும் என பெற்றோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நடைபயணத் தொடக்க விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், பேராசிரியர் காதர் மொய்தீன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.