திருச்சி துவாக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ரமீலா என்பவரது கணவர் பழனிச்சாமி (39) குவைத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இம்மாதம் 5-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். ரமீலா, மதிமுக மகளிர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார். ஆகவே, பழனிச்சாமி உடலை விரைந்து துவாக்குடி கொண்டு வர கோரி துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மூலம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் உடனடியாக செல்போன் மூலம் ரமிலாவை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் துரை வைகோ, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், சென்னையில் உள்ள குவைத் துணைத் தூதரக அதிகாரி ஆகியோரிடம் செல்போனில் பேசி பழனிச்சாமி உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே அயலகத்தில் உள்ள மதிமுக இணையதளத்தைச் சேர்ந்த மினர்வா ராஜேஷ், பிரசாத் ஆகியோரையும் தொடர்பு கொண்ட துரை வைகோ, பழனிச்சாமி பணியாற்றிய உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் இருந்து போதிய சான்றிதழ்கள் பெற்றுத்தர உதவிட கேட்டுக்கொண்டார். குவைத் நாட்டில் இதுபோன்ற சமூக நல உதவிகளை தாமாக முன்வந்து செய்திடும் சமூக ஆர்வலர் மதி மற்றும் பொறியாளர் கருணாநிதி ஆகியோரையும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பழனிச்சாமி உடலை தமிழகம் அனுப்ப ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று(08-06-2024) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பழனிச்சாமி உடல் ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடிக்கு கொண்டு வரப்பட்டது . பழனிச்சாமியின் உடலுக்கு திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் , துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன் பெரியகருப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துரை வைகோவின் பெரும் முயற்சியால் பழனிச்சாமியின் உடல் ஓரிரு நாட்களிலேயே தமிழகம் கொண்டு வரப்பட்டது.

Comments are closed.