Rock Fort Times
Online News

“கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளை காத்தது அதிமுக அரசு” … மண்ணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி மாவட்டத்தில் நேற்று திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்புரையாற்றிய அவர், இன்று (ஆகஸ்ட் 24) மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசிக்கு புகழ்பெற்ற ஊர். பொன்னி அரசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்ணச்சநல்லூர் விவசாயம் சார்ந்த பகுதி. நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினை குறித்து நான் நன்கறிவேன். எனது தொழில் விவசாயம்தான். நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் ஒரே ஜீவன் விவசாயிகள்தான். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. அதிமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் துயரைக் கண்டு அவர்கள் பெற்ற 12,100 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கப்பட்டது. மழை, வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகளவிலான பயிர் காப்பீட்டு தொகையை பெற்றுத் தந்தது அதிமுக அரசு தான். நான் முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வறட்சி காரணமாக பயிர்கள் சேதம் அடைந்தது. அப்போது 2,400 கோடி ரூபாய் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் துயரைத் துடைத்தேன். கண்ணை இமை காப்பது போல் விவசாயிகளை காத்தது அதிமுக அரசு. பசுமை வீடு, விலையில்லா கால்நடைகள் ஜெயலலிதா காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஏறத்தாழ 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிய அரசு அதிமுக அரசு. இந்தியாவிலேயே அதிக அளவு உணவு தானிய உற்பத்தியை பெருக்கி தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற செய்தது அதிமுக அரசு. ஆளும் திமுக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. அதனால் திட்டங்களை நிறைவேற்றி முடியவில்லை. சுகாதாரத்துறை நிர்வாகம் மோசமான நிலையில் உள்ளது. அதிமுகவில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் கிடையாது. திமுக, வாரிசு அரசியல் தான் பிரதானமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காவிரி ஆற்றில் பூக்களையும், நெல்மணிகளையும் எடப்பாடி பழனிசாமி தூவினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்ட ‌ நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்