திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று(02-02-2025) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி உற்சவர் அம்மனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். கொடி மரத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க அஸ்திர தேவர்களுக்கும், தங்க கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் குருக்கள் சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை ஏற்றி வைத்தார். விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8- ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.