Rock Fort Times
Online News

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’: தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்- பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (05-01 -2026) நடைபெற்றது. கூட்டத்தில், கடலூரில் வருகிற 9ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என மாவட்டச் செயலாளர்களின் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் தெரிவித்த அடிப்படையில் முடிவு எடுப்போம். தேர்தலுக்கு மூன்று மாதம் தான் இருக்கிறது. தொடர் போராட்டங்கள் தமிழ்நாடு முழுக்க நடக்கிறது. தேர்தலை ஒட்டி நிறைய அறிவிப்புகள் வரும். அது எந்த ஆட்சியில் இருந்தாலும் வரும். அந்தவகையில் தேர்தலுக்கு முன்னோட்டமாக அறிவுப்புகள் வருகிறது.  தூய்மை பணியாளர்கள் , செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பல  ஆண்டு காலமாக  போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் . தமிழ்நாடு அரசு அதில் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும். திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 கட்சிகள் களத்தில் இருக்கிறது. இதை தாண்டி இன்னொரு கூட்டணி வருமா? எனத் தெரியாது. நிச்சயமாக எங்களுடைய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தெளிவாக சிந்தித்து அவர்களுடைய கருத்துகளை கடிதம் மூலம் பெட்டியில் போட்டுள்ளனர். அந்த
கடிதத்தில் என்ன கருத்து இருக்கிறதோ அதை மாநாட்டில் அறிவிப்பேன். அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். அதை நிச்சயம் உரிய நேரத்தில் சரியான ஒரு முடிவை எடுத்து அறிவிப்போம்.   நிச்சயம் தை  பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற  தேர்தல் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு  தேர்தலாக நிச்சயம் இருக்கும்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்