பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் ராமராஜ் (வயது 26) மீன் வியாபாரியான இவர் இன்று(29-10-2023) அதிகாலை 4 மணி அளவில் திருச்சி புத்தூர் குழுமணி ரோட்டில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் ஒரு காரில் வந்துள்ளார்.
அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் ராமராஜை வெட்டுவதற்காக துரத்தினர்.
உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ராமராஜ் அங்கும் மிங்கும் ஓடினார். ஆனாலும், விடாமல் அவரை துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை கத்தியால் குத்தினர். மேலும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது மீன் வாங்க வந்த பொதுமக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ராமராஜ் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பழிக்கு பழியாக இவரை கொன்று இருக்கலாம் என போலீசாரின் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.