Rock Fort Times
Online News

கோவையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை- 3 பவுன் நகை கொள்ளை…!

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலாஜி நகரை சேரந்தவர் மனோகர் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மனோகர் தனது மகள்களுக்கு புதிய துணி வாங்கினார். அதை தைப்பதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் மகள்களை அழைத்துக்கொண்டு காந்திபுரத்தில் உள்ள டெய்லர் கடைக்கு சென்றிருந்தார். அங்கு துணிகளை தைக்க கொடுத்துவிட்டு 3 பேரும் வீடு திரும்பினார்கள். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ரேணுகா மயங்கி கிடந்தார். உடனே, இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. மருத்துவ ஊழியர்கள், ரேணுகாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேணுகாவை கொலை செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்