சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஏப்.13) ஏற்பட்ட வெடி விபத்தில், நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் 60 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் கிலோகணக்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பலமுறை வெடிப்பு ஏற்பட்டதால் பெரும் சத்தமும் புகையும் உருவாகி, சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் காயமடைந்த ராஜ்குமார் (42), செல்வம் (33), ரமேஷ் (42) ஆகிய மூவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். வெடிப்பின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்ததுடன், ஆலை வளாகத்தில் இருந்த ஐந்து இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.விபத்து குறித்து விசாரணையில், அந்த பட்டாசு ஆலை உரிமம் புதுப்பிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Comments are closed.