அரியலூர் அருகே பயங்கர விபத்து: லாரியில் ஏற்றிச் சென்ற சிலிண்டர்கள் டமார்…டமார்…. என வெடித்து சிதறியதால் பரபரப்பு… (பதற வைக்கும் வீடியோ இணைப்பு)
அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று அரியலூர் மாவட்டம், வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும்போது விபத்துக்குள்ளானது. இதில் லாரி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. லாரியில் இருந்த சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. தீ விபத்துக்குள்ளான சிலிண்டர் லாரியில் இருந்து டிரைவர் கனகராஜ் கீழே குதித்து உயிர் தப்பினார். இருந்தாலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். லாரியில் சிலிண்டர் வெடித்து சிதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நேற்று (10.11.2025) இரவு கார் வெடித்து சிதறியதில் பலர் உயிரிழந்த நிலையில் இன்று அரியலூரில் டமார்..டமார்..
என சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.