திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: டெண்டர் முறைகேடு, குடிநீர் இணைப்பு விவகாரம்..! திமுக கவுன்சிலர்கள் மோதல்-கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்ட்..!
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி, கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் அன்பழகன் பேசும்போது,
திருச்சி மாநகராட்சியில் இதுவரை 1,196 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.70 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 52 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நான்கு கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதத்தில் 726 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28,625 தெருநாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களை பராமரிக்க தனி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.இதனை தொடர்ந்து ஒவ்வொருவராக கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
நாகராஜ் (திமுக):
கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.
மேயர் அன்பழகன்:
கழிவுநீர், மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வார ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஜாமலை விஜய் (திமுக):
எனது வார்டில் 240 தெருவிளக்குகள் உள்ளன. இதில் 45 தெருவிளக்குகள் மட்டுமே எரிகிறது.
ந. பிரபாகரன் (விசிக):
மதுரை, சென்னை மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இங்கு அந்த அவப்பெயர் வராத வகையில் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எனது வார்டில் அறிவிக்கப்பட்ட சமுதாயக்கூடப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மேயர் அன்பழகன்:
பொது நிதி பற்றாக்குறை காரணமாக சமுதாயக்கூடங்கள் கட்டும் பணிகள் தாமதமாகிறது. மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஒவ்வொரு வார்டிலும் ஒரு சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும்.
சுரேஷ் (சிபிஐ):
திருச்சி மாநகராட்சியில் சாலைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், மழைநீர் வடிகால்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்க வேண்டும். அதேபோல் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.5 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் ஈட்டும் வகையில் அமைக்கப்பட்ட தில்லைநகர் பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட பல கட்டடங்கள் காலியாக இருப்பதால் இழப்பு ஏற்படுகிறது.
மேயர் அன்பழகன்:
தபால் அலுவலகத்திற்கு இப்போது கேட்டிருக்கிறார்கள். வாடகை குறைக்கச் சொல்லி இருக்கிறார்கள். வாடகை குறைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடியில் மழைநீர் வடிகால்களை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் (சிபிஐ):
ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.750 தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. 2024-ல் கலெக்டர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.718 ஆணை பிறப்பித்தார். அந்த ஊதிய உயர்வை ஏன் இதுவரை வழங்கவில்லை?
மேயர் அன்பழகன்:
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ அனைத்தும் இங்கு பிடிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதுமாக ஏற்கப்படுகிறது. மேலும் ஒரு மாதம் வரை வேலை செய்ய விட்டாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
முத்துச்செல்வம் (திமுக):
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கழிப்பிடம் டெண்டரில் மாநகராட்சிக்கு ரூ.13 லட்சம் கூடுதலாக கிடைத்தது. ஆனால் அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டரில் ரூ.3 லட்சம் மட்டுமே கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஆகவே சத்திரம் பஸ் நிலையம் சைக்கிள் ஸ்டாண்ட் ரீடெண்டர் விட வேண்டும்.
மேயர் அன்பழகன்:
ஏற்கனவே கொடுத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, ரீடெண்டர் விடுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு?… அதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்திற்கும் மேயர் அன்பழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்துச்செல்வம் ரீடெண்டர் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது முத்துச்செல்வத்துக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ராமதாஸ், “மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் போது ஏன் ரீடெண்டர் விடக்கூடாது?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஆணையர் மதுபாலன்:
சந்தை மதிப்பை ஆய்வு செய்து மீண்டும் ரீடெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமதாஸ் (திமுக):
குடிநீர் இணைப்புகள் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் தாங்களாகவே குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
மேயர் அன்பழகன்:
இதற்குப் பின்னணியில் நீங்கள் இல்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்போம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ், “வேண்டுமென்றால் என் மீது புகார் கொடுங்கள்” என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் “உங்கள் இருக்கையில் அமர்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை” எனக் கூறினார். இதனால் கோபமடைந்த மேயர், “இவரை வெளியேற்றுங்கள். இரண்டு மாதங்களுக்கு இவர் கூட்டத்தில் பங்கேற்க தடைவிதிக்கப்படும்” என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமதாஸ் பின்னர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டல குழு தலைவர் மதிவாணன் (திமுக):
பழைய பால்பண்ணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோ.கு.அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர்):
பஞ்சப்பூர் பஸ் நிலையம் கட்டுவதற்கு குளத்தை நிரப்புவதற்கே ரூ.17 கோடி நிதி செலவிடப்பட்டது. ஆனால் இப்போது பெரியார் சிலை, லாரி முனையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை சமன் செய்வதற்கு பொது நிதியில் இருந்து இவ்வளவு நிதி எதற்காக செலவழிக்க வேண்டும்? ஆனால் நான் ஏர்போர்ட்டில் ஒரு தெருவிளக்கு போட வேண்டும் என்றால் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகிறது.
ஆகவே முறையான சிக்னல் அமைத்து விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டுக்கு உட்பட்ட பசுமை நகரில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
மேயர் அன்பழகன்:
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இதை தொடர்ந்து விவாதம் நடைப்பெற்றுதொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“கவுன்சிலர்களில் ஒருவர் என்னைப் பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது. குடிநீர் இணைப்பு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் பிளம்பர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினோம். திமுக மாமன்ற உறுப்பினர் சப்ஜெக்ட் குறித்து கேள்வி கேட்கலாம். ஆனால் என் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பதால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். டெண்டர் முறைகேடு என்பது தவறான தகவல் ரூ.24 லட்சத்தை விட தற்போது ரூ.28 லட்சத்திற்கு கொடுத்துள்ளோம். மேயரை பிடிக்கவில்லை என்றால் அதிகாரி மற்றும் இன்ஜினியரிடம் கேட்க வேண்டும். மாமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை என்பது புதிதல்ல. இதற்கு முன்பு மேயராக இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதைத்தான் நானும் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.