ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்: முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(நவ. 22) ஆலோசனை…!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று(22-11-2025) ஆலோசனை செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இயங்கி வருகிற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வரும் ஆசிரியர்களும், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் நேற்று (நவ.21) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம். அரசின் சொத்தாக இருக்கிற ஆசிரியர்களை பாதுகாப்பது அரசின் கடமை. வருகிற டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சென்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன், முதலமைச்சர் ஸ்டாலின், ’ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேச வேண்டும். அதற்கான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்’ என என்னிடம் கூறினார். அதன்படி, தற்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளோம்” என்றார். தொடர்ந்து அவர்களுடைய கருத்துக்கள் குறித்து இன்று முதலமைச்சருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.