கனிம நிலங்களுக்கு வரி- ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்..!- சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் !
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான மசோதாவை கடந்த ஜனவரியில் தமிழக சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார் இதையடுத்து அம்மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிக்கும் மசோதாவை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அதில் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டப்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சில்லிமனைட்க்கு ரூ.7ஆயிரம், காரீயத்துக்கு ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் இயற்கை எரிவாயு ஒரு கனமீட்டருக்கு ரூ.3.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்..இந்த மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதா மற்றும் கனிம நிலங்களுக்கும் வரிவிதிக்கும் மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ( மார்ச் 8ம்தேதி ) ஒப்புதல் அளித்துள்ளார்.
ADVERTISEMENT…👇

Comments are closed.