Rock Fort Times
Online News

“பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்”- * பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி…!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று( ஜன. 23) தமிழ்நாடு வருகிறார். முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஊழல் படிந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி அவர்களே! தேர்தல் சீசன் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறீர்கள். நீங்கள் செய்த துரோகங்களை தமிழகம் நினைத்துப் பார்க்கிறது. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர ஷிக்‌ஷா கல்வி நிதி எப்போது வரும்?. மக்களவைத் தொகுதி மறுவரையறையின் கீழ் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?. பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?. தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜிராம்ஜி கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்?. இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?. தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்