தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கியது: லட்சக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பை பார்த்து கண் கலங்கிய விஜய்…!
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று(27-10-2024) மாலை 3-30 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக மாநாட்டு மேடையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் போன்றவை நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அப்போது தொண்டர்கள் வருங்கால முதலமைச்சர் விஜய் வாழ்க! வாழ்க!! என்று குரல் எழுப்பினர். பின்னர் கட்சியின் தலைவர் விஜய் ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடியே சென்றார். அப்போது தொண்டர்கள் தலைவரை பார்த்த மகிழ்ச்சியில் தாங்கள் அணிந்திருந்த கட்சியின் சால்வையை விஜய் நோக்கி வீசினர். அதனை ஒவ்வொன்றாக எடுத்து தனது கழுத்தில் விஜய் அணிந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்களின் ஆர்ப்பரிப்பை கண்டு கண் கலங்கினார். அதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி உயர கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் விஜயின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Comments are closed.