தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்- சாரண-சாரணியர் இயக்க நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் …!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட்டில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி ஜனவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது.இதனை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதில், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா இன்று(02-02-2025) நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வருக்கு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாரண, சாரணிய, இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து மேடைக்கு வந்த முதல்வர் சாரண, சாரணிய இயக்க வைர விழா மலரை வெளியிட்டார். பின்னர் அவர் விழா பேருரை ஆற்றினார்.அப்போது அவர் பேசுகையில், இது மணப்பாறையா இல்லை சாரண சாரணியர் இயக்கத்தின் பாசறையா என வியக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள அன்பில் மகேஷ்க்கு பாராட்டுக்கள்.மகேஷை நான் குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன். இன்று பள்ளி கல்வி துறை அமைச்சராக அவர் செய்து வரும் சாதனைகளை கூற இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.பள்ளி கல்வி துறையில் செயல்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அவர், பள்ளி கல்வி துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்.அவரின் சாதனைகளை பார்க்க அவரின் தந்தை பொய்யாமொழி இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும் பொய்யாமொழி இடத்திலிருந்து நான் அதை பார்த்து வருகிறேன்.
சாரண சாரணியர் இயக்கத்தில் இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் உள்ளார்கள். தமிழகத்தில் 12 லட்சம் பேர் உள்ளார்கள். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு இருக்கும் என்பதை சாரண, சாரணியர் இயக்கத்திலும் தெரிகிறது.நம் நாட்டு பற்று என்பது நாட்டின் மீதான பற்று என்பதை கடந்து மக்கள் மீதான பற்றாக இருக்க வேண்டும். மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டு பற்று.சாரண, சாரணியர் பொன் விழா கொண்டாடும் போது கலைஞர் முதல்வராக இருந்தார். இன்று வைர விழா கொண்டாடும் போது நான் முதலமைச்சராக இருக்கிறேன்.நாம் நம் நாட்டில் சகோதரத்துவ உணர்வோடு ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருகிறோம்.பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று திரண்டு ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக இருப்பது தான் நம் அன்பின் வலிமை.திராவிட மாடல் அரசால் இந்த விழாவிற்கு 33 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது. நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி. நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் தமிழகம் தான் முன்னிலையில் உள்ளது.தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.மானிடப் பிறப்பில் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்கிற உணர்வோடு இங்கிருந்து அனைவரும் பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் ஒன்று என்கிற நிலை எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், கோவி.செழியன், டி.ஆர்.பி. ராஜா, பள்ளி கல்வி துறை அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும்சாரண, சாரணியர் இயக்க அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.