மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம்…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்..
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
TEALS(Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமபுற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு உறுதுணையாக விளங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிசில் சுந்தர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சுதன் ஐ. ஏ.எஸ்(ஓய்வு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.