Rock Fort Times
Online News

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்கிட வேண்டும்- மத்திய மந்திரி அமித்ஷாவிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்…

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை, தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் இன்று(13-01-2024) சந்தித்தது. திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் வைகோ, கே.ஜெயகுமார், கே.சுப்பராயன், எஸ்.வெங்கடேசன், டி.ரவிகுமார், நவாஸ்கனி, சின்னராஜ் உள்ளிட்ட எம்பிக்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கையெழுத்திட்டு உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் வழங்கிய மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியதை தாங்கள் அறிவீர்கள். இந்தப் புயல் மற்றும் அதனை அடுத்து ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 3 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, டிசம்பர் 17, 18 தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த இயற்கை சீற்றங்களால் அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாநில அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், எதிர்பாராத அளவில் ஏற்பட்ட வானிலை மாற்றங்கள் காரணமாக நீர்நிலைகள், நீர் விநியோக முறை, சாலைகள், பாலங்கள், மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட பொது மற்றம் தனியார் சொத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி உள்ளார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சரிசெய்வதற்கு ரூ.7,033.45 கோடியும், நிரந்தரமாக சரி செய்வதற்கு ரூ.12,659.24 கோடியும் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. அதேபோல், தென் தமிழகத்தில் பெய்த கனமழை பாதிப்புகளை தற்காலிகமாக சரிசெய்ய ரூ.8,612.14 கோடியும், நிரந்தரமாக சரி செய்ய ரூ.9,602.38 கோடியும் இழப்பீடாக வழங்க கோரப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.37,907.21 கோடி இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினரும் நேரில் வந்து பார்த்த ஆய்வு செய்தனர். மாநில அரசு தன்னிடம் உள்ள நிதி ஆதாரம் மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், பாதிப்பின் அளவு மிகப்பெரியது என்பதால் தேசிய பேரிடர் நிவாரண நிதி உதவி இல்லாமல், முழுமையான அளவில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலாது. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாதம் கடந்து விட்டது. எனவே, தமிழக அரசு கோரியுள்ள நிதி உதவியை விரைவாக வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்