பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இரு சக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக் குழு இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் மாதந்தோறும்
3 பேருக்கு தலா ரூ.10,000, 10 பேருக்கு தலா ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த குலுக்கலில் வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு நாட்களில்
பயணிப்போர் இடம்பெற முடியாது. தற்போது அனைத்து பயணிகளும் பயன்பெறும் வகையில் குலுக்கல் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி விடுமுறை நாட்கள் உள்பட முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளின் பயணச்சீட்டும் குலுக்கலில் இடம்பெறும். இத்துடன் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில், முன்பதிவு செய்யும் பயணிகளில் மூவருக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது நவம்பர் 21 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை பயணிப்போருக்கு மட்டுமே பொருந்தும். அவர்களில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக இரு சக்கர வாகனம், 2-வது பரிசாக எல்இடி ஸ்மார்ட் டிவி, 3-வது பரிசாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.