ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், முதல்வர் உட்பட 7 பேருக்கு மட்டும் காவல்துறை அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், மிக முக்கியமான நபர்கள் தமிழகம் வரும்போது அவர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கடந்த 2012-ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற கடந்தாண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்துக்கு நிதி ஆணையம், மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், நாடாளுமன்றக் குழுக்கள், மாநில சட்டப் பேரவைக் குழுக்கள் வரும்போது என்ன அளவில் அணிவகுப்பு மரியாதை அளிப்பது என்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இந்த அணிவகுப்பு மரியாதை தொடர்பாக தற்போது தமிழக அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதில் தமிழகத்தில் அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருவோரில் யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடியரசுத் தலைவர் செயலகம், குடியரசு துணைத்தலைவர் செயலகம், பிரதமர் அலுவலகம் அளிக்கும் அறிவுறுத்தல்கள், சில நேரங்களில் மாநில அரசு எடுக்கும் முடிவு அடிப்படையில் மரியாதை அளிக்க வேண்டும். இதன் படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், மத்திய கேபினட் அமைச்சர்கள் ஆகியோருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும். மேலும், இவர்களுக்கு எந்த இடத்தில் எந்த அளவில் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி முடிவெடுக்க வேண்டும். இந்த உத்தரவானது, மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கும் பொருந்தும். நெறிமுறைகள் மீறப்படாததை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.