Rock Fort Times
Online News

பிரச்சாரம், ‘ரோடு ஷோ’ வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு…!

அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கும், ‘ரோடு ஷோ’ நடத்துவதற்கும் வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று(21-11-2025) தாக்கல் செய்துள்ளது. கரூரில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ‘ரோடு ஷோ’ நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய, ‘ரோடு ஷோ’ நடத்த வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக தமிழக அரசு, 10 நாட்களுக்குள் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விதிகளை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டனர். அதன்படி, தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டது. இதன்பின்னர் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியுள்ள நிலையில், வரைவு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இது தொடர்பான 25 பக்க அறிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். ஆனால், ஒவ்வொரு விதிக்கும் ஒவ்வொரு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் அறிக்கையின் நகலை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் இந்த வழக்கில் மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அறிக்கையின் நகலை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நவ. 27-க்கு ஒத்தி வைத்தனர்.
விதிமுறைகள்:

நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள விதிமுறைகளில்,
ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு.
5,000 பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.
5,000 பேருக்கு குறைவாக திரளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறி முறைகள் பொருந்தாது.
வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கும் நெறிமுறைகள் பொருந்தும்.
ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என விண்ணப்பிக்க வேண்டும்.
ரோடு ஷோக்களை பொருத்தவரை பிரச்சாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும்.
50,000 பேருக்கு மேல் திரளும் கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்