வருகிற மார்ச் 14-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- * மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு…!
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான மார்ச் மாதம் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார். அன்று காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். அவரது உரை சுமார் 1½ மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். எனவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெறும் என்று தெரிகிறது. மார்ச் 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
Comments are closed.