பா.ஜனதா சார்பில், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை மந்திரி முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சென்னைக்கு நேற்று வந்தனர். தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று( அக்.7) பா.ஜனதா மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற பா.ஜ.க. நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதிமுக – பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுப்பது, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments are closed.