அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்: உயர்கல்வித்துறை அமைச்சர் பதில் அளிப்பாரா?..* அண்ணாமலை கேள்வி !
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பேராசிரியர் ஒருவர், தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும், தனக்கு மட்டுமல்லாமல், தனது தோழிகள் சிலருக்கும் அவர் பாலியல் ரீதியான குறுஞ்செய்தியை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக செல்போனில் அழைத்து தொல்லை கொடுப்பதாகவும், இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருப்பதாகவும், விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவி கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இந்த புகார் மீது துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கடந்த 2024 ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை, கல்லூரியின் அருகே ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கண்டனம்:
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை, தமிழக காவல்துறைக்கு வைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.