Rock Fort Times
Online News

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி படுகொலை: எடப்பாடி பழனிசாமி, விஜய் கடும் கண்டனம்…!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும், பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தில் தினசெய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது. இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா? வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய்:

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. மதுராந்தகம் அருகே, 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை. மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்முடித்தனமான வெறியாட்டம். நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை. மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம். சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி. கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை. சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை. கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. உணவுப் பாதுகாப்பில் அலட்சியம். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு..எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்க எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?. தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும். பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். சட்டம்- ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்