2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் : திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது…
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று (9-1-2024) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக தனியார் டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பிறகு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பயணிகள் அதிகம் கூடும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.