டாட்டூ என்ற பெயரில் “இரட்டை நாக்கு ஆபரேஷன்” போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை- திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை…!
திருச்சி, சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 25). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (24) என்பவருடன் சேர்ந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே “ஏலியன் எமோ டாட்டூ” என்கிற பெயரில் உடலில் பச்சை குத்தும் கடை நடத்தி வந்தார். இங்கு வருபவர்களுக்கு உடலில் டாட்டூ வரைவதுடன் வித்தியாசமான முறையில் நாக்கை பிளவுபடுத்தும் ஆபரேஷனும் செய்து வந்தார். இதற்காக அவர், மும்பை சென்று அங்கு ரூ.6 லட்சம் செலவு செய்து தன் கண்களில் வெள்ளைப்படலத்தை நீலமாக மாற்றி கொண்டதுடன் தனது நாக்கையும் ஆபரேஷன் மூலம் இரண்டாக பிளந்து பச்சை குத்திக்கொண்டுள்ளார். இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனைப் பார்த்த இளைஞர்கள் பலர் அவருக்கு “லைக்” கொடுத்தாலும், சிலர் இதுபோன்ற ஆபரேஷன்கள் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்று கருத்து பதிவிட்டனர். இதுகுறித்து மாநகர போலீசாருக்கு புகார்களும் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், கோட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ஹரிஹரன், ஜெயராமன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் , உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்று மருத்துவ விதிமுறைக்கு அப்பால் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைவது மருத்துவ விதிமீறல். அவர்களுக்கு மருத்துவக் கருவிகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராமில் தற்போது இதுபோன்ற வீடியோ போடுவது அதிகரித்துள்ளது. முழுக்க முழுக்க உடல்நலத்தை பாதிக்கக்கூடிய இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments are closed.