திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை மும்பை, பெங்களூரு உள்பட உள்நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமானங்களின் தேவைப்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகவே, திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. அதன்படி 1200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா , பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில்,
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என முதலமைச்சர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிந்து இம்மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.