Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் தகவல்...

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று ( 30.11.2023 )  நடந்தது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு. மதிவாணன் , துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில்,

தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். டெங்கு கொசு பாதிப்பு எங்கும் கிடையாது.மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை அகற்ற மின் மோட்டார்களை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

சங்கர் (மார்க்சிஸ்ட் (கம்யூனிஸ்ட்):  எனது வார்டில் நகர்புற வாழ்வு மையம் வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ் (இ. கம்யூனிஸ்ட்):  எனது வார்டு பகுதியில் அமைக்கப்படாமல் இருக்கும் சாலையை விரைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .சில நேரங்களில் குடிநீர் மஞ்சளாக வருகிறது. ஆகவே, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்.

மேயர்: குடிநீர் தூய்மையாக இருக்கிறதா என்பதை கண்டறிய கம்பரசம்பேட்டையில் குடிநீர் தூய்மை ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக): எனது வார்டில் இரவு நேரத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.இந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன் (வி.சி. க.): மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பிகாபதி (அதிமுக) : வயர்லெஸ் ரோட்டில் சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கு சாலைகள் எடுக்கப்படுகிறது என்று வதந்தி பரவுகிறது.

நாகராஜன் (திமுக): ஆரம்ப சுகாதார நிலையங்களில் நெபுலைசர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னீர்செல்வம் (திமுக): சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பைஸ் அகமது (ம.ம.க.): எனது வார்டில் கோழி கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

செந்தில்நாதன் (அமமுக): எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது.

செல்வி மணி (திமுக): என் வார்டில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் நடைமேடை அமைத்தால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதேபோல மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு குறைகளை எடுத்துக் கூறினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்