தொழில் நகரமான கரூருக்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சியில் இருந்து கரூருக்கு அரசு ஏசி பேருந்து ஒன்று நேற்று( மார்ச் 21) இரவு 9 மணி அளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுனர் ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் அவரது செல்போனை பிடித்து கொண்டு பாடல் கேட்டுக் கொண்டே பேருந்தை இயக்கி சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் குழந்தைகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பயணிகள் சிலர் அவரிடம் செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டும் அவர் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தான் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகனங்களை இயக்கும்போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், அந்த விதிமுறையை மதிக்காமல் அதுவும் அரசு பணியில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.