2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் நாளை (பிப்ரவரி 1) முதல் திமுக தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதில் என்ன மாதிரியான திட்டங்கள் இடம்பெறும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையானது பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 தொகுதிகள் வரை பரப்புரையானது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் 22 பேரை திமுக தலைமைக் கழகம் அடையாளம் கண்டு ஒவ்வொருவருக்கும் தொகுதி பிரிக்கப்பட்டு, அதில் பரப்புரை மேற்கொள்ள தேதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதம் முழுவதும் காலை வேளையில் அந்த தொகுதியில் இருக்கும் திமுக தலைவர்கள், கட்சியின் முன்னோடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், வணிகர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுதல் போன்றவை நடைபெறும். இதில் 5 ஆண்டுகள் திமுக அரசு செய்த சாதனைகள், அமல்படுத்திய திட்டங்கள், சம்பந்தப்பட்ட தொகுதியில் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் பற்றியும், அதனால் மக்கள் பயனடைந்தது பற்றி பேசுவார்கள். இதற்கடுத்து தெருமுனை கூட்டம், தெருமுனை பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அதன்மூலம் திமுகவின் கொள்கைகள், சாதனைகள் பற்றி உரையாற்றுவார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் ஓரவஞ்சனை போக்குடன் பாஜக அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி விளக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும், ஆளாத மாநிலங்களிலும் காட்டப்படும் வேறுபாடு பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். 91 வாக்குறுதிகள் மத்திய அரசின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது.

Comments are closed.