திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானது. சோழ நாட்டு திருப்பதிகளில் பெருமை வாய்ந்த ஸ்தலம் . பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிற திருவரங்கம், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது .600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இரா[கோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்றங் கரையில் அமைந்துள்ள முதல் திவ்யதேச ஸ்தலம்.
இத்தனை பெரிய பரப்பளவு கொண்ட இக்கோவிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சுற்றிப் பார்த்து வெளியில் வருவதற்கு எவ்வளவு மணி நேரம் ஆகும் ..? அத்தனை மணி நேரம் இயற்கை உந்துதலை சமாளிக்க முடியுமா? உலகம் முழுவதிலுமிருந்து திருப்பதிக்கு பெருமாளை தரிசிக்க எந்த அளவிற்கு பக்தர்கள் செல்கிறார்களோ அந்த அளவிற்கு பக்தர்கள் திருவரங்கத்தை பார்க்கவும், பெருமாளை தரிசிக்கவும் தவறுவதில்லை. திருப்பதியில் தரிசனம் செய்ய வருவோருக்கு திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளது. குறிப்பாக வரிசையில் நின்று செல்லும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள ஆங்காங்கே கழிவறை வசதிகளையும் செய்து தந்துள்ளது . அங்கே ஆகம விதிகள் பின்பற்றப்பட்டாலும் பக்தர்களுக்கு வசதி குறைவு என்பது கிடையவே கிடையாது. அதே போன்று திருவரங்கத்தில் இந்த வசதிகள் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும். குறிப்பாக செய்ய வேண்டியது 2 வசதிகள். ஒன்று… கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வெளியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு இடத்தில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த அளவிற்கு அங்கு இடவசதி இல்லை இதனால் பக்தர்கள் வேறு வழியின்றி கொண்டு வந்த காலணிகளை ஒரு பைக்குள் போட்டு தரிசனம் செய்வதற்கு உள்ளேயே எடுத்துச் சென்று விடுகின்றனர். இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டாலும் வேறு வழியில்லை என்பதுதான்.
அதேபோன்று திருப்பதியில் தரிசனம் செய்ய வருபவர்கள் கழிவறை வசதிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவரங்கத்தில் வரிசையில் நின்று செல்லும்போது இது போன்ற கழிவறை வசதிகளை செய்ய இயலாத ஒரு நிலை இருந்தாலும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கழிவறை வசதிகளை செய்து தந்தால் பக்தர்கள் வருகை எண்ணிக்கை அதிகமாகும் . நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதி. காரணம் அவர்களுடைய நோய் அந்த மாதிரி . தங்களது பிரச்சனைகளை அதாவது சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே பெரும்பாலானோர் திருவரங்கத்திற்கு தரிசனம் செய்ய வருவதை தவிர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தூரதேசத்தில் இருந்து குடும்பத்தோடு வந்தாலும் உள்ளே சென்று அவதிப்பட வேண்டாம் என்பதற்காக வெளியிலேயே இருந்து விடுகிறார்கள். இது உண்மையான பக்தர்களுக்கு கோவில் செய்யும் பெரும் பாவம்தான் என்று சொல்ல வேண்டும். கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர்களுக்காக பல்வேறு வகையிலும் வசதி செய்து தருவதில் அக்கறை செலுத்தி வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை என்றாலும் உடனடியாக இங்கே குறிப்பிட்டுள்ளபடி காலணி பாதுகாப்பகம் விஷயத்தில் கூடுதல் வசதிகள், கோவிலின் உள்ளே கழிவறை வசதிகளை தமிழக முதல்வரிடம், இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் உத்தரவு பெற்று செய்து தர வேண்டும் என்பதுதான் பெருமாள் பக்தர்களின் எதிர்பார்ப்பு. நடக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்!