வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே சிறப்பு வாய்ந்தது ஆகும். அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழா ஆகும். திரு நெடுந்தாண்டகம், பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 30-ந்தேதி திருநெடுந்தாண்டக் துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பகல்பத்து திருநாள் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி மோகினி அலங்காரத்தில்
நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று(10-01-2025) அதிகாலை திறக்கப்பட்டது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4-15 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வந்தார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வழியாக வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரக்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்தார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1-15 மணியளவில் மூலஸ்தானம் சேருகிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி அரங்கநாதர் சுவாமி கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.