Rock Fort Times
Online News

அரசுப் பள்ளியில் ஆன்மீக உரை,மாற்றுத்திறனாளி ஆசிரியருடன் வாக்குவாதம்: மகாவிஷ்ணுவின் வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்…!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற மகாவிஷ்ணு என்பவர், முன் ஜென்ம பாவங்கள் காரணமாகவே தற்போது குறைகளுடன் சிலர் பிறக்கிறார்கள் எனவும், மாணவ- மாணவிகளுக்கு மெய்ஞானம் போதிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு இதுதொடர்பாக எதுவும் தெரியவில்லை என்றும் சர்ச்சை கருத்துக்களை கூறினார். அப்போது அவரது பேச்சை இடைமறித்த அந்தப் பள்ளியின் மாற்றுத்திறன் ஆசிரியர் சங்கர், பள்ளிகளில் இதுபோன்று பேசக்கூடாது என்று வாதிட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  மகாவிஷ்ணு பேசிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த அரசுப் பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.  தொடர்ந்து, கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை பாராட்டிய அமைச்சர், மூடநம்பிக்கை கருத்தையும், மாற்றுத்திறன் ஆசிரியரை அவதூறாக பேசியதற்கும் மகாவிஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.  இந்தநிலையில், வெளிநாடு சென்றிருந்த மகாவிஷ்ணு கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.  அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  இந்தநிலையில் மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோவை யூ ட்யூபில் இருந்து பரம்பொருள் அறக்கட்டளை நீக்கி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்