தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக “ஸ்பெஷல் ட்ரெயின்”…!
தமிழ்ப் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற தொடர் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தாம்பரம் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், தமிழ்ப் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற தொடர் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டும், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டும் கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் -போத்தனூர் இடையே (வெள்ளிக்கிழமைகளில்) வாராந்திர சிறப்பு ரயிலானது (06185) ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2 ஆகிய நாட்களிலும், மறுமார்க்கமாக போத்தனூர்-தாம்பரம் இடையே (ஞாயிற்றுக்கிழமைகளில்) வாராந்திர சிறப்பு ரயிலானது (06186) ஏப்ரல் 13, 20, 27, மே 4 ம் தேதிகளிலும் ஸ்பெஷல் ட்ரெயின் இயக்கப்பட உள்ளது. 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு சனிக்கிழமை காலை 7.15 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக போத்தனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு திங்கட்கிழமை பிற்பகல் 12.-15 மணிக்கு சென்றடையும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.