திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை விரட்டிச் சென்று தாக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் “சஸ்பெண்ட்”…!
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம் (48). இவருக்கும், ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் பெண் தலைமை காவலர் மாது ( 43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாதுவுக்கும் சமயபுரம் டோல்கேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகம் கோபமடைந்து மாதுவிடம் விசாரித்துள்ளார். இதுதொடர்பாக எதுவும் பதில் அளிக்காத அவர் ஆறுமுகத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். சம்பவத்தன்று ஆட்டோவில் ஜெயச்சந்திரனுடன் சிறுகாம்பூர் நோக்கி மாது சென்று கொண்டிருப்பதாக ஆறுமுகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆட்டோவை விரட்டிச் சென்று சிறுகாம்பூரில் ஜெயச்சந்திரனை வழிமறித்து அவரை அடித்து உதைத்தார். இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் அவருடன் வந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் மாது இருவரையும் பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.