திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஆண்டு ஒன்றுக்கு கட்டணம் ரூபாய் ஒரு லட்சம், ஒரு நாள் கட்டணம் ரூ.11,000 , நகராட்சி பகுதிகளில் ஆண்டொன்றுக்கு 75 ஆயிரம் நாள் ஒன்றுக்கு ரூ.7,500 மற்ற பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் நாள் ஒன்றுக்கு ₹5,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கெஜட்டில் இது போன்ற உத்தரவு வெளியிடப்பட்டு இருந்தாலும் இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி திருமண மண்டபங்களில் எந்த காரணத்தைக் கொண்டும் மது அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார். பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சுரண்டி கல்லா கட்ட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி வருகிறது இந்த அரசு என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.