தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.16-ந் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:* 2 லட்சம் பேர் முன்பதிவு…!
அக்டோபர் 20ம் தேதி(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அக்டோபர் 16-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 16 முதல் 19 வரை சென்னையிலிருந்து 14,268 சிறப்பு பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 6,100 சிறப்பு பேருந்துகள் என 20,372 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குத் திரும்ப 21-23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தேவையை சமாளிக்க, கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும் 300 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்கு கார், சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம் – பெருங்களத்தூர் வழியை தவிர்த்து, ஓ.எம்.ஆர் – கேளம்பாக்கம் – திருப்போரூர் வழியே போக்குவரத்து நெரிசலின்றி செல்லலாம். விடுமுறை முடிந்த பிறகு, மக்கள் சென்னை திரும்பும் நாட்களில் பயணிகள் வாகனத்தைத் தவிர்த்து, கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு TNSTC செயலி மற்றும் www.tnstc.in ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். போக்குவரத்து இயக்கம் குறித்து 94459 14436 என்ற தொலைபேசி எண்ணை எந்த நேரமும் அழைக்கலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-2628 0445, 044-2628 1611 எண்களில் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.