சில ‘அறிவிலிகள்’ வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள்…* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!
தி.மு.க.வின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், முதல்வர் பேசியதாவது:- அறிவை மையப்படுத்திய, அறிவுரையை பரப்பிய கட்சியின் 75-ம் ஆண்டு அறிவுத் திருவிழா இது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி எனும் குறளைப் போல துணை முதல்-மந்திரி உதயநிதியின் செயல்பாடு உள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை உதயநிதி செய்வதால் பெருமை கொள்கிறேன். சாமானியர்களால் தொடங்கப்பட்டு சாதனைப் படைத்த திமுகவை இன்றும் ஆராய்ச்சி செய்கின்றனர். கட்சியை தொடங்கினோம்; ஆட்சியை பிடித்தோம் என்று ஆட்சிக்கு வரவில்லை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக. இப்படி ஒரு இயக்கம் இனி தோன்ற முடியாது. இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப்போல வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல; எத்தனை கூட்டங்கள், தியாகங்கள், துரோகங்கள். படிப்பறிவு இல்லாத கிராமங்களில் முடிதிருத்தும் மையம் கூட மக்களின் சிந்தனை கூடங்களாக மாறியது. 75 ஆண்டு கால வரலாறு, சாதனைகளை 1,120 பக்கங்களில் உருவாக்க முயற்சித்தோருக்கு எனது பாராட்டுகள். திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள் கூட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தில் கட்டுரை எழுதியுள்ளனர். ஒரு மாநில கட்சியை அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் புகழ்ந்து எழுதியுள்ளனர். ஒடுக்குமுறையில் இருந்த மக்களை மீட்ட இயக்கம் என அன்புத் தம்பி ராகுல் காந்தி கூறியிருக்கிறார். சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம் என லாலு பிரசாத் யாதவ் பாராட்டியிருக்கிறார். கூட்டாட்சியின் வலிமையான பாரம்பரியம் என சரத்பவார் திமுக குறித்து கூறியிருக்கிறார். இந்த சாதனையும், வளர்ச்சியும் மற்றவர்களின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் முடக்க நினைத்தால் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று நம்மேல் கோபம். திராவிடம் வெல்லும் அதை காலம் சொல்லும் என கூறும் அறிவுத் திருவிழா இது. கருப்பு, சிவப்பு, நீலம் என அனைத்தும் சேர்ந்திருக்கும்போது எந்த காவியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாது என்று எஸ்.ஐ.ஆரை வைத்து தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சிக்கிறார்கள். இது கூடிக் கலையும் கூட்டமல்ல; காலந்தோறும் கொள்கைகளை கூறும் கூட்டமாக இருக்கிறது. இந்திய ஜனநாயகம், தமிழ்நாட்டை காக்க தொடர்ந்த பயணம் 2026-லும் தொடரும். தமிழ்நாடு தலைகுனியாது; தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.