அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வூதிய பிரச்சனைக்கு தீர்வு: முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி…!
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ- ஜியோ, போட்டோ- ஜியோ ஆகியவை ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தன. அதனைத்தொடர்ந்து அந்த சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று( ஜன. 3) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.