தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் தாமதம் என்பது ஆவின் பாலை மட்டுமே பயன்படுத்தும் சாதாரண பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஆவின் நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளது. ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்தது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ.35ம் எருமைப் பாலுக்கு ரூ.42 வீதம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து விலைகொடுத்து வாங்கிவந்தது. அதே சமயம் தனியார் பால் கொள்முதல் மையங்களின் கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால், ஆவினுக்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில உடன்பாடு எட்டப்பட்டது. சில கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் காரணமாக ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் இன்னும் தனியாரிடம் தான், பால் ஊற்றி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் தட்டுப்பாடு இன்னும் நிலவி வருகிறது. தற்போது உள்ள 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 3.99 லட்சம் பால் பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்கிறது. இந்த பால் போதுமானதாக இல்லாததால் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை பெருக்க விரிவான திட்டம் வகுத்து வருகிறது. அதன்படி வெளி மாநிலங்களில் இருந்து 2 லட்சம் கலப்பின ஜெர்சி கறவை மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாடுகளின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கி கடன் மூலம் ஜெர்சி மாடுகளை வாங்கி கொடுத்து பால் உற்பத்தியை பெருக்குவதே இதன் நோக்கம். இதற்காக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. வங்கி கடனை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கறவை மாடுகளை வாங்குவதற்கு உதவி செய்யும். இதற்காக பால் உற்பத்தியாளர்களின் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான வங்கி உத்தரவாதத்தை ஆவின் வழங்குவதுடன் பணத்தை திருப்பி செலுத்தும் தொகை உற்பத்தியாளர்களின் பால் பில்லில் சேர்க்கப்பட்டு பால் ஊற்ற, ஊற்ற அந்த பணம் மாதாமாதம் கழிக்கவும், ஆவினுக்கு சங்கம் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கவும் ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.